கோழிப்பண்ணையில் பதிவேடுகள் பராமரிப்பு

கோழிப்பண்ணையில் பதிவேடுகள் பராமரிப்பு


  • எந்தவொரு தொழிலாக இருந்தாலும், பதிவேடுகள் பராமரிப்பு என்பது ஒரு முக்கியமான வேலையாகும். பண்ணையில் பதிவேடுகள் பண்ணையின் செயல்பாடுகள், கணக்குகள் போன்றவைற்றை முறையாக கண்காணித்து, கணக்கிடப் பயன்படுத்தப்படுகின்றன.
  • முறையாகப் பதிவேடுகளைப் பராமரித்தால் மட்டுமே ஒரு தொழிலை நன்றாக நடத்தமுடியும்.
  • பதிவேடுகளை பண்ணையினை மேலாண்மை செய்வதற்கும், வரவு செலவு கணக்குகளைப் பதிவு செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
  • பண்ணையில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் எளிதாகவும், எளிதில் புரிந்து கொள்வதற்கு ஏற்றதாகவும், தேவையான விவரங்களை அளிப்பதாகவும், விவரங்கள் முறையாக ஒரு முறை மட்டுமே பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இருக்க வேண்டும்.
  • பதிவேடுகள்,பண்ணை எந்த நிலையில் உள்ளது என்பதைத் தெளிவாக எடுத்து சொல்பவையாக இருக்கவேண்டும்.
  • பதிவேடுகளை பார்ப்பதால், அவர் கடந்த காலத்தின் என்ன தவறுகள் செய்தார் என்பதை சுட்டிக்காட்டி, பிற்காலத்தில் அந்த தவறுகளை திருத்திக் கொள்வதற்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்.
  • பண்ணையின் உற்பத்தி, தர அளவுகோல்களின்படி உற்பத்தி இருக்கிறதா என்பதையும் பதிவேடுகள் காண்பிக்க வேண்டும்.
  • பண்ணையின் எதிர்கால திட்டமிடுதலுக்கும், மாற்றங்களுக்கும், விரிவாக்கத்திற்கும் ஏதுவான தகவல்களை அளிக்கவல்லதாக இருக்க வேண்டும்.
  • பண்ணையின் அளவினைப் பொறுத்தும், பண்ணையின் வகையினைப் பொருத்தும் பதிவேடுகளின் தன்மை மாறுபடும்.
  • பண்ணையின் அளவினையும், தன்மையினையும் பொறுத்து கீழ்க்கண்ட அடிப்படை பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.

வருகைப் பதிவேடு மற்றும் தினக்கூலி பணியாளர்கள் பதிவேடு
இந்த பதிவேட்டில் பண்ணையில் வேலை செய்யும் வேலையாட்கள் பற்றிய வருகைப் பதிவேட்டுடன், அவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் பற்றிய விவரங்கள் அடங்கியிருக்க வேண்டும். மேலும் வேலையாட்கள் சம்பளம் பெற்றதற்கான ஆதாரமும் இருக்க வேண்டும்.

கட்டிடங்கள் பற்றிய பதிவேடு

  • இப்பதிவேட்டில் பண்ணையிலுள்ள பல்வேறு கட்டிடங்கள், கிணறுகள், வேலிகள், சாலைகள் போன்றவற்றைப் பற்றிய விவரங்கள் அடங்கியிருக்கும்.
  • மேலும் பண்ணையில் மேற்கொள்ளப்பட்ட சிறிய ரிப்பேர்கள், மற்றும் பண்ணையினை பராமரிக்க செய்யப்பட்ட செலவினங்கள் பற்றிய விவரங்கள் அடங்கியிருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு வருடமும் பண்ணைக் கட்டிடங்களுக்கான விலை மதிப்புக் குறைவும் குறிப்பிட வேண்டும்.
  • ஒவ்வொரு வருடமும் விலை மதிப்புக் குறைவினை கணக்கிட்ட பிறகு அந்தந்த வருடத்தின் கட்டிட மதிப்பினை குறித்து வைத்து கொள்ள வேண்டும்.

பண்ணை உபகரணங்கள் பதிவேடு

  • பண்ணை உபகரணங்களான தீவன ஆலை, வாகனங்கள், கூண்டுகள், குஞ்சு பொரிப்பான்கள், தீவனத்தட்டுகள், தண்ணீர்த் தட்டுகள் போன்றவை பற்றிய விவரங்கள் இந்தப் பதிவேட்டில் அடங்கியிருக்க வேண்டும்.
  • பண்ணை உபகரணங்கள் வாங்கிய தேதி,வாங்கிய இடம், எண்ணிக்கை, விலை போன்ற விவரங்கள் இந்தப் பதிவேட்டில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
  • உபகரணங்கள் பழுதுபட்டிருந்தால், அவற்றைப் பழுது நீக்கப்பட்ட விவரங்களும் இந்தப் பதிவேட்டில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
  • வருடாவருடம் பண்ணை உபகரணங்களுக்கான விலை மதிப்புக் குறைவையும் இந்தப் பதிவேட்டில் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் அந்தந்த வருடத்திற்கான விலையினையும் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.

தீவன மற்றும் தீவன மூலப்பொருட்கள் பற்றிய பதிவேடு

  • கோழிப்பண்ணைத் தொழிலில் அதிக செலவினம் பிடிப்பது தீவனத்திற்காகும். எனவே இந்தப் பதிவேட்டினைப் பராமரிக்கும் போது மிகுந்த கவனம் தேவை.
  • ஒவ்வொரு தீவன மூலப்பொருளுக்கும் சில பக்கங்கள் ஒதுக்க வேண்டும்.
  • ஒவ்வொரு மூலப்பொருளுக்கும் வாங்கிய அளவு பற்றிய விவரம், சேமிப்பில் உள்ள தீவன மூலப்பொருளின் அளவு, தீவனம் அரைக்கப்பட ஒதுக்கப்பட்ட விவரம், சேமிப்பின் போது ஏற்பட்ட இழப்பு, உற்பத்தி செலவு, மீதி இருப்பிலுள்ள தீவன மூலப்பொருளின் அளவு போன்றவை பற்றிய விவரங்கள் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு தீவன மூலப்பொருளின் விலை, ஒவ்வொரு முறை தீவனம் தயாரிக்கும் போது அதற்கான விலை போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • குறிப்புகள் பற்றிய பகுதியில் தீவன மூலப்பொருட்கள் வாங்கியதன் ரசீதின் எண், தேதி, மொத்த விலை, எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது பற்றிய விவரங்களை குறித்து வைக்க வேண்டும்.

சிறிய அல்லது இதர பொருட்கள் வாங்கியதற்கான அல்லது செலவினத்திற்கான பதிவேடு

  • இந்த பதிவேட்டில் சில கருவிகள், எழுது பொருட்கள், பல்புகள், ஆணிகள் போன்ற இதர பொருட்களை வாங்கியதற்கான கணக்குகள், மற்றும் இதர அன்றாட செலவினங்கள் பற்றிய விவரங்கள், மாதாந்திர மற்றும் வருடாந்திர செலவினங்கள் பற்றிய விவரங்களை இந்தப் பதிவேட்டில் கணக்கிட்டு பதிவு செய்ய வேண்டும்.
  • மேற்கூறிய பொதுவான பதிவேடுகளைத் தவிர கீழ்க்கண்ட தனிப்பட்ட பதிவேடுகளையும், பண்ணையின் வகை மற்றும் அதன் தன்மைக்கேற்றவாறு பராமரிக்க வேண்டும்.

முட்டைக் கோழிகள் பற்றிய பதிவேடு

  • ஒவ்வொரு பேட்ச் கோழிகளுக்கும் அவற்றின் உற்பத்தித் திறன் பற்றிய பதிவேடுகளை அவற்றின் முதல் நாள் உற்பத்தியிலிருந்து, பண்ணையிலிருந்து கழிக்கும் வரை கீழ்க்கண்டவாறு பதிவு செய்ய வேண்டும்.
  • நாள், வயது (நாட்களில்), பண்ணையில் விட்ட கோழிகளின் எண்ணிக்கை, இறந்த கோழிகளின் எண்ணிக்கை மற்றும் அதன் விவரம், தீவனம் அளித்தது, ஒரு நாளைக்கு ஒரு கோழி உண்ணும் தீவனத்தின் அளவு, முட்டை உற்பத்தி, ஒரு நாள் கணக்கில் கோழிகள் உற்பத்தி செய்த முட்டைகளின் எண்ணிக்கை, தீவனம் உண்ட அளவிற்கு உற்பத்தி செய்த முட்டைகளின் எண்ணிக்கை போன்றவற்றைக் குறித்து வைக்க வேண்டும்.

Egg out turn register

  • பண்ணையில் பராமரிக்கப்படும் அனைத்து கோழிகளின் முட்டை உற்பத்தி செய்த விவரங்கள் அடங்கியிருக்கும்.
  • இந்த பதிவேட்டில் தேதி, இருப்பிலுள்ள முட்டைகளின் எண்ணிக்கை, உற்பத்தியான முட்டைகளின் எண்ணிக்கை, விற்ற முட்டைகளின் எண்ணிக்கை, மீதமுள்ள முட்டைகளின் எண்ணிக்கை, மற்றும் இதர விவரங்களும் குறிப்பிடப்பட வேண்டும்.
  • தவிரவும், தினசரி முட்டைகள் என்ன விலைக்கு விற்கப்பட்டது என்பது பற்றிய விவரங்களும் இந்தப் பதிவேட்டில் குறிக்கப்பட வேண்டும்
  • மாதாந்திர முட்டை உற்பத்தி மற்றும் இதர விவரங்களை ஒவ்வொரு மாதம் மற்றும் ஆண்டு முடிவில் தொகுத்து, மொத்தமாக உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகள், விற்றது பற்றிய விவரங்கள் போன்றவை குறிப்பிடப் பட வேண்டும்.

இறைச்சிக் கோழிப்பண்ணை பதிவேடுகள்

  • இறைச்சிக் கோழிப் பண்ணையின் உற்பத்தி பற்றிய விவரங்களும் ஒரு பதிவேட்டில் கீழ்க்காணும் விவரங்களோடு குறித்து வைக்கப்பட வேண்டும்.
  • எப்போதும் இருக்கக்கூடிய விவரங்களோடு, கோழிகளின் பேட்ச் எண், கோழிக்குஞ்சுகள் எங்கிருந்து வாங்கப்பட்டது, கோழிக்குஞ்சுகள் வாங்கிய விலை, இனாமாகப் பெறப்பட்ட கோழிக்குஞ்சுகளின் எண்ணிக்கை, குஞ்சு பொரித்த நாள், ஒரு கோழிக்குஞ்சின் விலை, இறைச்சிக் கோழியின் இனத்தின் வகை போன்றவை பற்றிய விவரங்களும் குறிப்பிடப்பட வேண்டும்.
  • இது தவிர மற்ற பொதுவான விவரங்களான தேதி, கோழிகளின் வயது நாட்களில், இறந்த கோழிகளின் எண்ணிக்கை, தீவனம் அளிக்கப்பட்டது பற்றிய விவரம், மற்ற விவரங்களும் குறிப்பிடப்பட வேண்டும்.
  • மற்ற விவரங்கள் பற்றிய இடத்தில் கோழிகளுக்கு அளிக்கப்பட்ட மருந்துகள், தடுப்பூசிகள், கோழிகள் இறந்ததற்கான காரணம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும்.
  • இறைச்சிக் கோழிகள் பற்றிய பொதுவான விவரங்கள் அவற்றின் 56 நாள் வயது வரை பதிவேட்டில் பொதுவாக குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் இறைச்சிக்கோழிகளை விற்கும் வரை இந்த விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.
  • மற்ற விவரங்களோடு விற்ற கோழிகளின் உயிர் எடை, விற்ற கோழிகளின் எண்ணிக்கை, இறப்பு விகிதம், கோழிகள் உட்கொண்ட மொத்தத் தீவன அளவு, தீவன மாற்றுத் திறன், தீவனத்தின் விலை, கறிக்கோழிகள் விற்ற விலை, கோழிக்குஞ்சுகளின் விலை, மற்ற செலவுகள் (மின்சார செலவு, வேலையாட்களின் சம்பளம், மருந்து செலவு, தடுப்பூசிக்கான செலவு, எரிபொருள் செலவு) போன்றவற்றையும் பதிவு செய்திட வேண்டும்.
  • மேற்கூறிய விவரங்களை வைத்து ஒரு கிலோ உயிர் எடை கறிக்கோழியினை உற்பத்தி செய்ய ஆகும் செலவினை ஒவ்வொரு பேட்ச் கோழிகளுக்கும் கணக்கிட வேண்டும்.

இனப்பெருக்கக் கோழிப்பண்ணைப் பதிவேடுகள்

  • இனப்பெருக்கக் கோழிப்பண்ணையில் உள்ள பதிவேடுகள் முட்டைக் கோழிப்பண்ணையில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் போன்றே இருக்கும். இந்த பதிவேடுகளில் ஒவ்வொரு பேட்ச் கோழிகள் இட்ட கருவுற்ற முட்டைகளின் எண்ணிக்கை, பண்ணையில் ஒரு நாள் உற்பத்தி செய்யப்பட்ட கருவுற்ற முட்டடைகளின் எண்ணிக்கை, முட்டைகள் விற்ற விவரம் போன்றவற்றையும் குறிப்பிட வேண்டும்.

குஞ்சு பொரிப்பக பதிவேடுகள்

  • இந்தப் பதிவேடுகள், முட்டைக் கோழிப்பண்ணையிலுள்ள முட்டைகள் உற்பத்தி, மற்றும் விற்பனைப் பதிவேடு போன்றே பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் இந்தப் பதிவேடுகளில் கீழ்க்கண்ட விவரங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்:

தேதி, இருப்பு விவரம், வாங்கிய விவரம், முட்டை அடைவைத்த விவரம், கழிக்கப்பட்ட முட்டைகளின் விவரம், விற்ற முட்டைகளின் விவரம், உற்பத்தி செய்யப்பட்ட கோழிக்குஞ்சுகளின் எண்ணிக்கை, விற்ற கோழிக்குஞ்சுகளின் எண்ணிக்கை, கழிக்கப்பட்ட கோழிக்குஞ்சுகள், இலவசமாக கோழிக்குஞ்சுகள், மற்ற விவரங்கள் போன்றவை.

ஒவ்வொரு பேட்ச் குஞ்சு பொரிப்பிற்கான விவர அட்டை

  • இந்தப் விவர அட்டையில் கீழ்க்கண்ட விவரங்களைப் பதிவு செய்யவேண்டும்.
  • அடைவைத்த வரிசை எண், அடை வைத்த முட்டைகளின் எண்ணிக்கை, முட்டைகளின் வகை, முட்டைகள் வாங்கிய இடம், கழிக்கப்பட்ட முட்டைகளின் எண்ணிக்கை, அடை காப்பானிலிருந்து குஞ்சு பொரிப்பானுக்கு மாற்றப்பட்ட முட்டைகளின் எண்ணிக்கை, பொரிக்கப்பட்ட தரமான கோழிக்குஞ்சுகளின் எண்ணிக்கை, நோஞ்சான குஞ்சுகளின் எண்ணிக்கை, பொரிக்கப்பட்ட பெட்டைக் கோழிக்குஞ்சுகளின் எண்ணிக்கை, பொரிக்கப்பட்ட சேவல் குஞ்சுகளின் எண்ணிக்கை, அடை வைக்கப்பட்ட முட்டைகளின் மொத்த குஞ்சு பொரித்த சதவிகிதம், கருவுற்ற விகிதம் போன்ற விவரங்கள் குறிக்கப்பட வேண்டும்.

கோழிக்குஞ்சுகள் விற்ற மற்றும் கழித்த விவரப் பதிவேடு

  • இந்தப் பதிவேட்டில் கோழிக்குஞ்சுகள் விற்ற விவரம், கழித்த விவரம், தேதி, இருப்பிலுள்ள கோழிக்குஞ்சுகள், பொரித்த குஞ்சுகள், கோழிக்குஞ்சுகள் விற்ற விவரம், சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட குஞ்சுகள் பற்றிய விவரம், கழிக்கப்பட்ட கோழிக்குஞ்சுகள், இலவசமாகக் கொடுக்கப்பட்ட கோழிக்குஞ்சுகள், கடைசியாக இருப்பிலுள்ள குஞ்சுகள், கோழிக்குஞ்சுகள் விற்ற விலை, மற்றும் இதர விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
  • இதர விவரங்கள் குறிக்கும் இடத்தில் மேரக்ஸ் நோய்க்கான தடுப்பூசி அளிக்கப்பட்ட விவரம், மற்றும் விவரங்கள் குறிப்பிட வேண்டும்.

தீவன ஆலைப் பற்றிய பதிவேடு

  • மேற்கூறிய பொதுவான விவரப் பதிவேடுகளைப் போலவே இந்தப் பதிவேடும் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் தீவன மூலப்பொருட்களை பற்றி தனித்தனியான விவரம் கூடுதலாக குறிப்பிடப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு தீவன மூலப்பொருளுக்கும் சில பக்கங்கள் ஒதுக்குவதுற்கு பதிலாக, ஒவ்வொரு தீவன மூலப்பொருளுக்கும் தனித்தனிப் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும்.
  • தீவன மூலப்பொருட்கள் பதிவேட்டில் தீவன மூலப்பொருட்கள் பற்றாக்குறை பற்றிய விவரமும் குறிப்பிட்டிருக்க வேண்டும். மூலப்பொருட்கள் அரைத்த விவரம், தீவனம் கலக்கும் போது ஏற்படும் இழப்பு, தீவன மூலப்பொருட்களை அரைத்துக் கலந்த பிறகு அவற்றை எவ்வளவு நாள் உபயோகப்படுத்தலாம், போன்றவை பற்றிய விவரங்களைக் குறித்து வைக்க வேண்டும்.
  • தீவன மூலப்பொருட்கள் வாங்கப்பட்ட இடம், ரசீது எண், ஒரு அலகு தீவன மூலப்பொருளின் விலை, தீவன மூலப்பொருள்களுக்கான விலையினைக் கொடுத்த விவரம் போன்ற விவரங்கள் இதர குறிப்புகள் பகுதியில் குறிப்பிட வேண்டும்.

வெவ்வேறு விதமான தீவனங்களைத் தயாரிக்கும் போது, அவை யாருக்கு விற்பனை செய்யப்பட்டது, ஒரு அலகு தீவனத்தின் விலை,விற்பனை ரசீது எண், பணம் வாங்கப்பட்ட விவரம் போன்ற விவரங்கள் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.

மேலே செல்க